தமிழ் இனி மெல்ல சாகும் என்று மகாகவி பாடியதாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது . உண்மையில் "தமிழ் இனி மெல்ல சாகும் என்று ஒன்றும் தெரியாத பேதை ஒருவன் கூறுகின்றான். இந்த மாதிரி வார்த்தைகளை நான் கேட்க விரும்பவில்லை. எனவே தமிழை காப்போமாக" என்றே அவர் கூறுகிறார். | |||||||||||||||||
|
ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். |
||||||||||||||||
|
மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். |
||||||||||||||||
|
கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். |
||||||||||||||||
|
சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். |
||||||||||||||||
|
நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். |
||||||||||||||||
|
கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்றன் காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் என்னென்ன வோபெய ருண்டு-பின்னர் யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்! |
||||||||||||||||
|
தந்தை அருள்வலி யாலும்-முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டும் காலன்-என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். |
||||||||||||||||
|
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! |
||||||||||||||||
|
"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. |
||||||||||||||||
சொல்லவும் கூடுவ தில்லை-அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" |
|||||||||||||||||
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ? சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! |
|||||||||||||||||
|
தந்தை அருள்வலி யாலும்-இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும்-புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். |
November 25, 2012
மெல்லத் தமிழினிச் சாகும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment