November 30, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச்  சாவார்-இவர் 

அஞ்சாத பொருளில்லை அவனியிலே 

வஞ்சனை ப் பேய்கள் என்பார்-இந்த 

மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்

துஞ்சுது முகட்டில்  என்பார்-மிக 

துயர்ப் படுவார் எண்ணிப்  பயப்படுவார் 
(நெஞ்சு)


மந்திர வாதி யென்பார்-சொன்ன  

மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார் 

யந்திர சூனியங்கள் -இன்னும் 

எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!

தந்த பொருளைக் கொண்டே - ஜனம் 

தாங்குவர்  உலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 

அஞ்சுதரு பேயென்றெண்ணி  நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு)
  
சிப்பாயைக் கண்டு  அ ஞ்சுவார்-ஊர்ச்

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 

துப்பாக்கி கொண்டு  ஒ ருவன்  வெகு 

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 

அப்பால்  எவனோ செல்வான்-அவன் 

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிற்பார் 

எப்போதும் கைகட்டுவார்-இவர் 

யாறிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் 
(நெஞ்சு)
  
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 

கோடிஎன்  றால் அது பெரிதாமோ?

ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால், 

நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 

நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (
நெஞ்சு)


சாத்திரங்கள்   ஒன்றும்  காணார் -பொய்ச் 

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 

கோத்திரம் ஒன் றா யிருந்தாலும் -ஒரு 

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார் 

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச் 

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 

ஆத்திரங்  கொண்டே இவன் சைவன் -இவன் 

அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார்.
 (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்குதில்லையே -இதை 
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு  திலையே  
கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்   
பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் 
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் 
துஞ்சி மடிகின்றாரே -இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)


எண்ணிலா நோயுடையார்-இவர் 
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் 
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து 
நாலாயிரங் கோடி நயந்து நின்ற 
புண்ணிய நாட்டினிலே -இவர் 
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

November 25, 2012

மெல்லத் தமிழினிச் சாகும்?

தமிழ் இனி மெல்ல சாகும் என்று மகாகவி பாடியதாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது . உண்மையில் "தமிழ் இனி மெல்ல சாகும் என்று  ஒன்றும் தெரியாத பேதை  ஒருவன் கூறுகின்றான். இந்த மாதிரி வார்த்தைகளை நான் கேட்க விரும்பவில்லை. எனவே தமிழை காப்போமாக"  என்றே அவர் கூறுகிறார்.    ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.


மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
      மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
      ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.


கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
      காற்றையும் வான வெளியையும்  சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.


சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
      தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
      நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.


நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
      நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
      சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.


கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்றன்
      காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
      யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!


தந்தை அருள்வலி யாலும்-முன்பு
      சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.


இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
      ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
      கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!


"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
      பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
      மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
      சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;

மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
      இந்த வசையெனக் கெய்திட லாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


தந்தை அருள்வலி யாலும்-இன்று
      சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
      ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

November 9, 2012

பெண்கள் விடுதலைக் கும்மி

 
காப்பு  
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே. 

 

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!                                                  (கும்மி)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.                                                         (கும்மி)

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!                                                      (கும்மி)

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.                                                   (கும்மி)

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.                                                 (கும்மி)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற்  பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!                                              (கும்மி)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                                                         (கும்மி)

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!                                                             (கும்மி)

November 8, 2012

புதுமைப் பெண்

தீர்க்கதரிசி பாரதியின்  இக்கவிதை வரிகள் படிக்க படிக்க உள்ளம்சிலிர்க்கிறது.  யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
 
 போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல்  லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய் கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர்  உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி  உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

November 2, 2012

சின்னஞ் சிறு கிளியே


பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததில்  பெருமிதம் கொண்டு, அவர்களை அன்புடன் அரவணைக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் மஹா கவியின் இப்பாடல்  வரிகள் சமர்ப்பணம்


சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையிலே  - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?