March 15, 2010

இன்போசிஸ் சுதா மூர்த்தி செய்த சாதனை என்ன?


எம் டெக்  பட்டதாரியான இவர் செய்த சாதனை தான் என்ன? எம் டெக் (கணினி அறிவியலில்) தங்கப்பதக்கம் வாங்கினாரே அதுவா? அல்லதுபொதுச்சேவையில் ஈடுபட்டு பல விருதுகள் வாங்கி  இருக்கிறாரே அதுவா? அல்லது  இன்போசிஸ் என்ற நிறுவனம் வளரக்  காரணமாக இருந்தாரே அதுவா?  
இவை எல்லாம் அவர் செய்த சாதனைகளாக இருக்கலாம் ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர் செய்த சாதனைகளில் என்னை கவர்ந்தது., எனக்கு பிடித்த பத்து பெண்களில் ஒருவராக அவரது பெயரை எழுத வைத்தது என்னவெனில் 'டாட்டா  மோட்டோர்ஸ்' என்று இன்று அழைக்கப்படும் 'டெல்கோ' வில் பணி புரிந்த முதல் பெண் என்பதுதான்.
இவர் 'indian institute of science   bangalore' இல் எம்.டெக் படித்துக்கொண்டிருந்தபோது 'டெல்கோ' வின்  வேலை வாய்ப்பிற்கான   விளம்பரம் ஒன்றில் "wanted bright young graduates." என்ற வரிகளை பார்த்திருக்கிறார்.
அந்த விளம்பரத்தின் கடைசி வரிகளில் "female candidates need not apply" என்ற வரிகளை பார்த்து பொங்கி எழுந்து ஒரு அஞ்சலட்டையில்  JRD TATA விற்கு "டாட்டா  என்ற  முன்னணியில் உள்ள  ஒரு நிறுவனத்தில் இது போன்ற பால்நிலை பாகுபாடு காட்டப்படுவது சரியா?" என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதி விட்டு அது குறித்து மறந்தும் விட்டார். ஆனால் சில நாட்களிலேயே  'டெல்கோ' விலிருந்து வந்த ஒரு தந்தியின் வாயிலாக அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த  தந்தியில் அவரை நேர்முகத்தேர்விற்காக  அழைத்திருப்பதாகவும், மேலும்  போக்குவரத்து செலவிற்காக முதல் வகுப்பு பயணக்கட்டணம் வழங்கப்படும்  என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.நேர்முக தேர்வில்  பங்கேற்ற அவர்    வேலைக்காக தேர்வு  செய்யப்பட்டார்.
அவரது கடிதம் கண்ட JRD டாட்டா, அவரை நேர்காணலுக்கு அழைக்கும்படியும், அவருக்கு திறமை இருக்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்யும் படியும் தேர்வு செய்யும் குழுவிற்கு அறிவுறுத்தி இருந்தார் என்று அவர் பணியில் சேர்த்தும் தெரிந்து கொண்டாராம்.