December 26, 2012

தீதும், நன்றும், பிறர் தர வாரா

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆதலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
அனைத்து இடங்களும் நமது ஊரே ,
அனைவரும் நம் உறவினர்களே ;

 தீதும், நன்றும், பிறர் தர வாரா;
தீயவை , நல்லவை. பிறர் தந்து வருபவை அல்ல 

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
கஷ்டங்களும், அந்த கஷ்டங்களுக்கான  
தீர்வும் கூட அதே  போல தான். பிறர் தந்து வருபவை அல்ல.

சாதலும் புதுவது அன்றே! 
மரணம் புதுமையான ஒரு விஷயம் இல்லை.
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!
வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் மாட்டோம்.
முனிவின் இன்னாது என்றலும் இலமே!
வாழ்வு துன்பமென்று கூறி ஒதுங்கவும் மாட்டோம் 
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, 
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 
காட்சியில் தெளிந்தனம் ஆதலின்,   

ஆற்று நீர்  செல்லும் வழியில் ஓடும் படகு போல,
நமது வாழ்க்கை முன்னரே  தீர்மானிக்கப்பட்ட  
வழியே தான்  நடக்கும் என்று,
வாழ்வின்  திறம் அறிந்த சான்றோர் 
கூறியதைக் கேட்டு தெளிவு பெற்றோம் ஆகையால்

மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

மாண்புள்ள பெரியோரைக் கண்டு 
நாம் வியப்படையவும்  மாட்டோம்.
நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை
இகழ்ந்து தூற்றவும் மாட்டோம்.


December 21, 2012

நடிப்பு சுதேசிகள்

நடிப்பு சுதேசிகள்  என்ற  தலைப்பில் பாரதி எழுதிய  பாடல்  இது. 

பிரிட்டிஷ்  ஆட்சி காலத்தில் சுதந்திரம் வேண்டிப்  போராடியவர்களுக்கு சுதேசிகள் என்று பெயர். சுதந்திரம் வேண்டிப்  போராடுபவர்களை தேசதுரோகம் செய்தவர்களைப்  போல் பிரிட்டிஷ் அரசு நடத்தியதால் சுதந்திரம் வேண்டி போராடுபவர்களுடன் பேசவோ அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளவோ கூட சக மனிதர்கள் பயந்திருந்த காலம் அது. 
இது ஒரு புறம் இருக்க, ஒரு சிலரோ சுதேசிகள் போல் வாய்    கிழிய  பேசுவார்களே ஒழிய, உண்மையான சுதந்திர   உணர்வு  இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களை சாடி பாரதி எழுதிய கவிதை தான்  இது.
இன்று நடிப்பு சுதேசிகளை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்காதெனினும், வாய்சொல்லில் வீரர்கள் நம்மை சுற்றி பலர்   எல்லா கால கட்டத்திலும் இருக்கத்  தான்  செய்கிறார்கள். 

பாரதியின் பாடல் இங்கே  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடீ !

கூட்டத்திற்  கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி

 நாட்டத்திற்  கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ !

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பர் எங்கள் துணிகளென்பர்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்

உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா

மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனதி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்

பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்

துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்

வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

December 13, 2012

கண்ணம்மா என் குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன்

 
கண்ணம்மாவை தனது குலதெய்வமாக பாவித்து 
அவளிடம் சரண் புகும் பாரதியார், 
 
பொன்னை உயர்வை புகழை விரும்பும் 
என்னை கவலைகள் அணுகா வண்ணம் 
காப்பாய் தாயே...
 
வறுமையும் அச்சமும் என் நெஞ்சில் வந்து 
குடி புகுந்துள்ளன அவற்றை கொன்று 
அழிப்பாய் தாயே ..
 
நான் என்ன செய்வது என்று குழம்பி தவிக்காமல், 
நீ சொல்லும் வண்ணம் செய்து 
மன நிம்மதி பெற அருள்வாய் தாயே.. 
 
என்று மனமுருக வேண்டி பின் 
 
அவளை சரண் புகுந்து விட்டதால் இனி 
துன்பமோ சோர்வோ தோல்வியோ எனக்கு 
இல்லை..
நல்லது எது  தீயது எது என்று எனக்கு தெரியாது,
அந்த  தாயே நல்லதை நிலை நிறுத்தி
தீமையை என்னை விட்டு ஓட்ட வேண்டும் 
என உருகும் பாடல் இது 
 
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியவன் 
மனதிலே அச்சம் புகுந்ததேன்? 
என்ற கேள்வியுடன் இதோ அந்த பாடல்  
 
 
  
 
 
 நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
  நின்னைச் சரணடைந்தேன்!

                  சரணங்கள் 
 
 பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
  என்னைக் கவலைகள் தின்னத்  தகாதென்று

 மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
 குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

 தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
 நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்

 துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
 அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

 நல்லது தீயது நாமறியோம்! அன்னை
 நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

December 12, 2012

நிற்பதுவே,நடப்பதுவே, பறப்பதுவே



நிற்பதுவே,நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே,  இளவெயிலே,  மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? வெறுங்  காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர்  கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

 சோலையிலே மரங்க ளெல்லாம்  தோன்றுவதோர் விதையிலென்றால் ,
சோலை பொய்யாமோ? - இதை சொல்லோடு  சேர்ப்பாரோ ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

December 11, 2012

இன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள்


பாரதி..
இன்று உன்  பிறந்த நாள்..
நீ பிறந்த அந்நாளில் நான் இந்த புவியில் இல்லை..
உன் பிறந்த நாளை நான்
கொண்டாடும் இந்நாளில் நீ இந்த புவியில் இல்லை..
இன்று நீ இங்கு இல்லாதிருக்கலாம்..
எனினும் நீ  எழுதிச்சென்ற கவிதைகள்
என் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை நீ  அறிவாயோ

December 3, 2012

தேடிச் சோறுநிதந் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?