February 25, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்-3 விடை

What is the english word, which is pronounced by everyone incorrectly?


விடை "incorrectly"  தான். வேற என்ன?




கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -3

What is the english word, which is pronounced by everyone incorrectly?

February 24, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -2

ஒருவருடைய வயது 1980 இல் 20 ஆனால்  1985 இல் 15. எப்படி ?

February 21, 2010

பழகலாம் வாங்க...

தமிழின் அழகு, தமிழின் தனிச்சிறப்பு  'ழகரம் ' தானே! ஆனால் இன்று 'ழகரம்' பலரிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறது. இன்று பலர் ழகரத்தை  சரியாக உச்சரிப்பதில்லை. (ழகரத்தை மட்டும் தானா...) காரணம் முறையான பயிற்சி இல்லாமையே. (உக்கும்  இருந்தா மட்டும் ...) சில தமிழ் பின்னணி பாடகர்களுக்கு  கூட ழகர உச்சரிப்பு சரியாக வருவதில்லை. (சில தமிழ் பாடகர்களுக்கு தமிழே வருவதில்லையே..இதற்கென்ன சொல்ல...) குழந்தைப்பருவத்திலேயே ழகர உச்சரிப்பு பயிற்சி சரியாக கொடுக்கப்பட வேண்டும். (அதுக்காக நீங்க குழந்தை பருவத்தை தாண்டி இருந்தா இந்த பயிற்சி எடுத்துக்க கூடாதுன்னு  சொல்லலீங்க...) நண்பர்களே உங்கள் குழந்தைகள் ழகரத்தை சரியாக உச்சரிக்கவில்லை எனில் கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சி வாக்கியத்தை தினமும் காலையில் பலமுறை திரும்ப திரும்ப கூறிப்பழகச்செய்யவும். சில நண்பர்களுக்கு இந்த வாக்கியம் ஏற்கனவே தெரிந்திருக்க  சிறிது வாய்ப்பு உள்ளது. (தெரியாமல் இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு). அரைத்த மாவையே அரைப்பதாக எண்ண வேண்டாம். தெரியாதவர்களுக்காகத்தான்   குறிப்பிடுகிறேன்.

"ஏழைக்கிழவன்  வியாழக்கிழமை வாழைப்பழத்தோல் வழுக்கி கீழே விழுந்தான்."

இதுதான் அந்த பயிற்சி வாக்கியம்.

பி.கு கிழவன் என்று மரியாதை இல்லாமல் கூற விரும்பாத நண்பர்கள் 'கிழவர்', 'விழுந்தார்' என்று மரியாதையாகக்கூட கூறிப்பழகலாம்.

February 19, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் விடை

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது அவளது வயது எட்டு.
இது எப்படி சாத்தியம்? யாராவது தெரிந்தால் கூறுங்களேன்.

 புதிருக்கான விடை: அந்த குழந்தை பிறந்தது பிப்ரவரி 29 , 1896.
வழக்கமாக லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்தநாள் வரும். ஆனால் இங்கு அடுத்த லீப் ஆண்டு 1900 இல்லை.  ஏனெனில் எண் 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் மட்டுமே லீப் ஆண்டு  ஆகும். எனவே அடுத்த  பிப்ரவரி 29  ஆம் தேதி ,  1904 இல் தான் வந்தது . அப்போது அந்த குழந்தைக்கு  வயது 8 .
பெயரில்லா நண்பர் (மன்னிக்கவும் : பெயர் வெளியிட விரும்பாத நண்பர்) மிகுந்த முயற்சிக்குப்பிறகு  சரியான விடையை கூறி இருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே ...

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது அவளது வயது எட்டு .
இது எப்படி சாத்தியம் ? யாராவது தெரிந்தால் கூறுங்களேன் .

February 11, 2010

வதந்தி

தயவு செய்து அடுத்த முறை நீங்கள்  ஒரு வதந்தியை கேட்கவோ அல்லது பரப்பவோ முற்படுமுன் இதனை படிக்கவும்.

 கிரீஸ் நாட்டின் புகழ்பெற்ற தத்துவஞானி சாக்ரடீஸ்  (கி மு  469 - 399 ).

 ஒரு முறை அவரை சந்திக்க அவருக்கு பரிச்சயமான ஒரு நபர் வந்திருந்தார். அவர் சாக்ரடீசிடம்  "உங்கள் மாணவர்களில் ஒருவனை பற்றி நான்  என்ன  கேள்விப்பட்டேன்  என்றால்..."  என்று தொடங்கினார்.

சாக்ரடீஸ் உடனே   "ஒரு நிமிடம்,  நீங்கள் என்னிடம் எதுவும் சொல்வதற்கு முன் நான் நடத்தும் "test of  three "  என்னும்  ஒரு சிறிய சோதனையில்  நீங்கள் வெற்றி பெறவேண்டும் " என்றார்.

அந்த நபர் :   "test of  three? "

சாக்ரடீஸ் : "ஆமாம் , முதல் சோதனை :   தாங்கள் என்னிடம்  கூற விரும்பும் விஷயம் உண்மை என்று தங்களால் உறுதியாக கூற முடியுமா?" என்று கேட்டார்               

அந்த நபர்  "இல்லை...அது வந்து.... நான் கேள்விப்பட்டேன்..."

சாக்ரடீஸ்  " நல்லது , அப்படியென்றால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் உண்மையா இல்லையா என்று உங்களுக்கே தெரியாது இல்லையா ?  "சரி இரண்டாவது சோதனைக்கு வருவோம் . தாங்கள் சொல்ல வந்த விஷயம் என் மாணவனைப்பற்றிய எதாவது ஒரு  'நல்ல விஷயமா' ?"

அந்த நபர் தயங்கியவாறே  " இல்லை...மாறாக ...."

சாக்ரடீஸ் " ஆக என் மாணவனைப்பற்றிய   ஒரு தவறான செய்தியை, அதுவும் உண்மையா இல்லையா என்று நிச்சயமாக உங்களால் கூற முடியாத நிலையில் என்னிடம் கூற விரும்புகிறீர்கள்?"

அந்த நபர் குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பிக்க...

சாக்ரடீஸ் " கவலைப்படதீர்கள்  நீங்கள் சோதனையில் வெற்றி பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது சோதனை:  நீங்கள் என் மாணவன் பற்றி என்னிடம் இப்போது கூறப்போகும் விஷயம் எனக்கு எந்தவிதத்திலாவது பயன் அளிப்பதாக  இருக்குமா"

அந்த நபர் "இல்லை அது வந்து...."

சாக்ரடீஸ் "நல்லது , தாங்கள் சொல்லபோகும் விஷயம் உண்மையா? என்றும் தெரியாது, அது ஒரு நல்ல விஷயமா? என்றால் அதுவும்  இல்லை , அதனால் எனக்கு   பயன்  ஒன்றும்  இல்லை. இந்நிலையில்  தாங்கள் என்னிடம் அந்த விஷயத்தை எதற்காக  கூற வேண்டும் ?"

 அந்த நபர் வெட்கி தலை குனிந்தார் .

February 10, 2010

எரிமலையும்... பனிப்புயலும்...

நான் இணையத்தில் தேடி எடுத்த சில அரிதான புகைப்படங்கள் கீழே..

ஹவாய் எரிமலை : (புகைப்படங்கள் james balog )





பனிப்புயல் : (புகைப்படங்கள் jean_pierre scherrer) 

 

 





February 7, 2010

என் குழந்தைப்பருவம்

என் குழந்தைப்பருவ   நிகழ்வுகளில் பல இன்றும் பசுமரத்து ஆணி போல என் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். என் வாழ்வின் பொற்காலம் என்று என் குழந்தைப்பருவத்தைக்  கூறலாம். நான் எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை தமிழகத்தின்  ஒரு சிறிய கிராமத்தில் தான் இருந்தோம். அப்பா பள்ளி ஆசிரியர். அப்பா, அம்மா, தம்பி, தங்கை, நான் இதுதான் எங்கள் குடும்பம். அந்த  கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய  படித்தவர்களில் அப்பாவும் ஒருவர்.

இது நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது நடந்த ஒரு நிகழ்வு. அப்போதெல்லாம் முதியோர்க்கல்வி என்று ஒன்று மாலை வேளைகளில் பள்ளி வளாகத்தில் நடத்தப்படும். அதற்கான ஆள் சேர்க்கை நடை பெறும்போது நான்கு இளைஞர்கள் (20  வயதிற்கு உட்பட்டவர்கள்) தங்களையும்  முதியோர் கல்வியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் முறையிடஇவ்வளவு இளம் வயதில் முதியோர் கல்வியில் சேர்த்துக்கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் வாதிட்டுக்கொண்டிருக்க, இந்நிலையில் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்த என் தந்தை, அவ்விளைஞர்களின் படிப்பார்வத்தை பார்த்து, தினமும் மாலை வேளைகளில் வீட்டிற்கு வந்தால், தானே அவர்களுக்கு படிக்க எழுத சொல்லி தருவதா கூறினார் (இலவசமாகத்தான்) .

அவர்களது குறிக்கோள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை எழுத படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கடிதம் எழுதவும்,  பேருந்து மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளை படிக்குமளவிற்கும்  கற்று கொண்டால் போதும் என்ற விருப்பத்துடன் தினமும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். அப்பா ஒரு அரைமணி நேரம் அவர்களுக்கு கற்று கொடுப்பார். பிறகு அன்று கற்றுக்கொண்டவைகளை  என்னிடம்  எழுதிக்காட்டிவிட்டு   வீட்டிற்கு  போகுமாறு கூறிவிட்டுவெளியே சென்று விடுவார்  (நான்காம் வகுப்பில்  தமிழ் ஆங்கிலம் பிழை இல்லாமல் எழுதுவேன் நான் , நம்புங்கப்பா ...)

இப்படியாக என்னில் மூத்தோர்களுக்கு ஆசிரியை பணி செய்யும் வாய்ப்பு எனக்கு ...


அவர்கள் செய்யும் பிழைகளை அப்பாவிடம் கூறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  "கண்ணு அப்பாகிட்ட சொல்லாத, உனக்கு நாளைக்கு மிட்டாய் வாங்கி தரோம் " என்பார்கள். நானும் ஒரு கடமை தவறாத அரசு அதிகாரியின் தோரணையுடன் "அண்ணா லஞ்சமா? அப்பாகிட்ட சொல்லட்டுமா" என்று கோபித்துக்கொள்வேன். மேலும் அப்பாவிடம் சொல்லியும் விடுவேன். அதனால் என்னை வெறுப்பேற்ற அடுத்தநாள் தம்பி தங்கைக்கு மட்டும் மிட்டாய் வாங்கி வருவார்கள். இப்படியே மாதங்கள் உருண்டோடின. ஓரளவிற்கு எழுதப்படிக்க   கற்றுக்கொண்டனர். (ஓரளவிற்கு தான்). கடிதம் எழுதுவது எப்படி ?, முகவரி எங்கே எழுத வேண்டும் என்றெல்லாம் அப்பாவிடம் சந்தேகம் கேட்டு தெரிந்து கொண்டனர்.


இந்நிலையில் திடீரென ஒரு நாள் அவர்கள் நால்வரையும் காணவில்லையென்று அவர்களின்  பெற்றோர்கள்  எங்கள் வீடு தேடிவந்து என் தந்தையிடம் கேட்க,  என் தந்தையும்  எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் குழம்ப,  அனைவருக்கும் அச்சம் கலந்த அதிர்ச்சி.  இப்படியே ஒரு வாரம் போனது. ஒரு நாள் அவர்களில் ஒருவரின் வீட்டிற்கு, அவர்களால் சிறு சிறு எழுத்து பிழைகளுடன் எழுதப்பட்ட  கடிதம் ஒன்று வந்தது. அதில் அனைவரும் தங்களை மன்னிக்கும்படியும், அவர்களது கடிதம் எழுதும் திறன் மற்றும் பேருந்து பெயர்ப்பலகை  படிக்கும் திறனை சோதிப்பதற்காக நால்வரும் சென்னை சென்றிருப்பதாகவும், விரைவில் ஊர்  திரும்புவதாகவும் எழுதி இருந்தனர்.  அவர்களின் பெற்றோர்கள்  "வாத்தியார் படிக்க எழுத சொல்லிகொடுத்தது  தான் எங்கள் பிள்ளைகள் ஊரை விட்டு வெளியே செல்ல காரணம்" என்ற ரீதியில் பேச தொடங்கி விட்டனர். அப்பாவிற்கும் கவலை தான். இந்நிலையில் ஒரு பத்து நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர் .

அடுத்த நாள் அனைவரும் அப்பாவின் முன்னிலையில் தலைகுனிந்த நிலையில்....

"ஏன் இப்படி செய்தீர்கள்"  என்று அப்பா கோபத்துடன்  கேட்க "நீங்கதானே சார் பயப்படாம  தைரியமா எதையும் செய்யணும்னு  சொல்லி குடுத்தீங்க..வெளியூர் போறோம்னு சொல்லி இருந்தா எங்க வீட்ல அனுப்பி இருக்க மாட்டாங்க, அதான் சொல்லாம போனோம் .  இப்போ எங்களுக்கு தைரியம் வந்துடுச்சி, நாங்க சென்னையில் போட்ட லெட்டர் நம்ம ஊருக்கு வந்துடுச்சி..எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா" என்று அவர்கள் கூற அவர்களை பாராட்டுவதா கண்டிப்பதா என்று புரியாத நிலையில் அப்பா ...

"எப்படி இருந்தாலும் நீங்கள் நிறைய கற்றுக்கொண்டு விட்டீர்கள்  . எனவே இனி மாலை வகுப்புக்கு  வரவேண்டிய தேவை இல்லை" என்று அப்பா கண்டிப்புடன் கூறிவிட்டார். அவர்களும் சிறிது நேரம் கெஞ்சி பார்த்துவிட்டு வருத்ததுடன் சென்று விட்டனர்.

எனக்குதான்  சில நாட்களுக்கு  அதிகாரம் செய்வதற்கு அண்ணன்கள் இல்லாமல் மிகவும் வருத்தமாக இருந்தது. வழியில் எங்காவது எப்போதாவது  பாரத்தால் மிகவும் பாசத்தோடு  "கண்ணு நல்லா இருக்கியா?" என்று விசாரிப்பார்கள். "நல்லா படிக்கணும்" என்று அறிவுரை வேறு.

அவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் துணிச்சல் எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இன்று நினைத்து பார்த்தால் வியந்து போகிறேன் .