February 7, 2010

என் குழந்தைப்பருவம்

என் குழந்தைப்பருவ   நிகழ்வுகளில் பல இன்றும் பசுமரத்து ஆணி போல என் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். என் வாழ்வின் பொற்காலம் என்று என் குழந்தைப்பருவத்தைக்  கூறலாம். நான் எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை தமிழகத்தின்  ஒரு சிறிய கிராமத்தில் தான் இருந்தோம். அப்பா பள்ளி ஆசிரியர். அப்பா, அம்மா, தம்பி, தங்கை, நான் இதுதான் எங்கள் குடும்பம். அந்த  கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய  படித்தவர்களில் அப்பாவும் ஒருவர்.

இது நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது நடந்த ஒரு நிகழ்வு. அப்போதெல்லாம் முதியோர்க்கல்வி என்று ஒன்று மாலை வேளைகளில் பள்ளி வளாகத்தில் நடத்தப்படும். அதற்கான ஆள் சேர்க்கை நடை பெறும்போது நான்கு இளைஞர்கள் (20  வயதிற்கு உட்பட்டவர்கள்) தங்களையும்  முதியோர் கல்வியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் முறையிடஇவ்வளவு இளம் வயதில் முதியோர் கல்வியில் சேர்த்துக்கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் வாதிட்டுக்கொண்டிருக்க, இந்நிலையில் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்த என் தந்தை, அவ்விளைஞர்களின் படிப்பார்வத்தை பார்த்து, தினமும் மாலை வேளைகளில் வீட்டிற்கு வந்தால், தானே அவர்களுக்கு படிக்க எழுத சொல்லி தருவதா கூறினார் (இலவசமாகத்தான்) .

அவர்களது குறிக்கோள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை எழுத படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கடிதம் எழுதவும்,  பேருந்து மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளை படிக்குமளவிற்கும்  கற்று கொண்டால் போதும் என்ற விருப்பத்துடன் தினமும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். அப்பா ஒரு அரைமணி நேரம் அவர்களுக்கு கற்று கொடுப்பார். பிறகு அன்று கற்றுக்கொண்டவைகளை  என்னிடம்  எழுதிக்காட்டிவிட்டு   வீட்டிற்கு  போகுமாறு கூறிவிட்டுவெளியே சென்று விடுவார்  (நான்காம் வகுப்பில்  தமிழ் ஆங்கிலம் பிழை இல்லாமல் எழுதுவேன் நான் , நம்புங்கப்பா ...)

இப்படியாக என்னில் மூத்தோர்களுக்கு ஆசிரியை பணி செய்யும் வாய்ப்பு எனக்கு ...


அவர்கள் செய்யும் பிழைகளை அப்பாவிடம் கூறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  "கண்ணு அப்பாகிட்ட சொல்லாத, உனக்கு நாளைக்கு மிட்டாய் வாங்கி தரோம் " என்பார்கள். நானும் ஒரு கடமை தவறாத அரசு அதிகாரியின் தோரணையுடன் "அண்ணா லஞ்சமா? அப்பாகிட்ட சொல்லட்டுமா" என்று கோபித்துக்கொள்வேன். மேலும் அப்பாவிடம் சொல்லியும் விடுவேன். அதனால் என்னை வெறுப்பேற்ற அடுத்தநாள் தம்பி தங்கைக்கு மட்டும் மிட்டாய் வாங்கி வருவார்கள். இப்படியே மாதங்கள் உருண்டோடின. ஓரளவிற்கு எழுதப்படிக்க   கற்றுக்கொண்டனர். (ஓரளவிற்கு தான்). கடிதம் எழுதுவது எப்படி ?, முகவரி எங்கே எழுத வேண்டும் என்றெல்லாம் அப்பாவிடம் சந்தேகம் கேட்டு தெரிந்து கொண்டனர்.


இந்நிலையில் திடீரென ஒரு நாள் அவர்கள் நால்வரையும் காணவில்லையென்று அவர்களின்  பெற்றோர்கள்  எங்கள் வீடு தேடிவந்து என் தந்தையிடம் கேட்க,  என் தந்தையும்  எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் குழம்ப,  அனைவருக்கும் அச்சம் கலந்த அதிர்ச்சி.  இப்படியே ஒரு வாரம் போனது. ஒரு நாள் அவர்களில் ஒருவரின் வீட்டிற்கு, அவர்களால் சிறு சிறு எழுத்து பிழைகளுடன் எழுதப்பட்ட  கடிதம் ஒன்று வந்தது. அதில் அனைவரும் தங்களை மன்னிக்கும்படியும், அவர்களது கடிதம் எழுதும் திறன் மற்றும் பேருந்து பெயர்ப்பலகை  படிக்கும் திறனை சோதிப்பதற்காக நால்வரும் சென்னை சென்றிருப்பதாகவும், விரைவில் ஊர்  திரும்புவதாகவும் எழுதி இருந்தனர்.  அவர்களின் பெற்றோர்கள்  "வாத்தியார் படிக்க எழுத சொல்லிகொடுத்தது  தான் எங்கள் பிள்ளைகள் ஊரை விட்டு வெளியே செல்ல காரணம்" என்ற ரீதியில் பேச தொடங்கி விட்டனர். அப்பாவிற்கும் கவலை தான். இந்நிலையில் ஒரு பத்து நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர் .

அடுத்த நாள் அனைவரும் அப்பாவின் முன்னிலையில் தலைகுனிந்த நிலையில்....

"ஏன் இப்படி செய்தீர்கள்"  என்று அப்பா கோபத்துடன்  கேட்க "நீங்கதானே சார் பயப்படாம  தைரியமா எதையும் செய்யணும்னு  சொல்லி குடுத்தீங்க..வெளியூர் போறோம்னு சொல்லி இருந்தா எங்க வீட்ல அனுப்பி இருக்க மாட்டாங்க, அதான் சொல்லாம போனோம் .  இப்போ எங்களுக்கு தைரியம் வந்துடுச்சி, நாங்க சென்னையில் போட்ட லெட்டர் நம்ம ஊருக்கு வந்துடுச்சி..எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா" என்று அவர்கள் கூற அவர்களை பாராட்டுவதா கண்டிப்பதா என்று புரியாத நிலையில் அப்பா ...

"எப்படி இருந்தாலும் நீங்கள் நிறைய கற்றுக்கொண்டு விட்டீர்கள்  . எனவே இனி மாலை வகுப்புக்கு  வரவேண்டிய தேவை இல்லை" என்று அப்பா கண்டிப்புடன் கூறிவிட்டார். அவர்களும் சிறிது நேரம் கெஞ்சி பார்த்துவிட்டு வருத்ததுடன் சென்று விட்டனர்.

எனக்குதான்  சில நாட்களுக்கு  அதிகாரம் செய்வதற்கு அண்ணன்கள் இல்லாமல் மிகவும் வருத்தமாக இருந்தது. வழியில் எங்காவது எப்போதாவது  பாரத்தால் மிகவும் பாசத்தோடு  "கண்ணு நல்லா இருக்கியா?" என்று விசாரிப்பார்கள். "நல்லா படிக்கணும்" என்று அறிவுரை வேறு.

அவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் துணிச்சல் எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இன்று நினைத்து பார்த்தால் வியந்து போகிறேன் .




No comments: