தீதும், நன்றும், பிறர் தர வாரா; தீயவை , நல்லவை. பிறர் தந்து வருபவை அல்ல
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; கஷ்டங்களும், அந்த கஷ்டங்களுக்கான தீர்வும் கூட அதே போல தான். பிறர் தந்து வருபவை அல்ல.
சாதலும் புதுவது அன்றே! மரணம் புதுமையான ஒரு விஷயம் இல்லை.
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!
வாழ்க்கை இனிமையானது என்று மகிழவும் மாட்டோம்.
முனிவின் இன்னாது என்றலும் இலமே!
வாழ்வு துன்பமென்று கூறி ஒதுங்கவும் மாட்டோம்
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின்,
ஆற்று நீர் செல்லும் வழியில் ஓடும் படகு போல, நமது வாழ்க்கை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழியே தான் நடக்கும் என்று, வாழ்வின் திறம் அறிந்த சான்றோர் கூறியதைக் கேட்டு தெளிவு பெற்றோம் ஆகையால்
நடிப்பு சுதேசிகள் என்ற தலைப்பில் பாரதி எழுதிய பாடல் இது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சுதந்திரம் வேண்டிப் போராடியவர்களுக்கு சுதேசிகள் என்று பெயர். சுதந்திரம் வேண்டிப் போராடுபவர்களை தேசதுரோகம் செய்தவர்களைப் போல் பிரிட்டிஷ் அரசு நடத்தியதால் சுதந்திரம் வேண்டி போராடுபவர்களுடன் பேசவோ அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளவோ கூட சக மனிதர்கள் பயந்திருந்த காலம் அது. இது ஒரு புறம் இருக்க, ஒரு சிலரோ சுதேசிகள் போல் வாய் கிழிய பேசுவார்களே ஒழிய, உண்மையான சுதந்திர உணர்வு இல்லாதவர்களாகவே இருப்பார்கள். அவர்களை சாடி பாரதி எழுதிய கவிதை தான் இது. இன்று நடிப்பு சுதேசிகளை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்காதெனினும், வாய்சொல்லில் வீரர்கள் நம்மை சுற்றி பலர் எல்லா கால கட்டத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
பாரதி..
இன்று உன் பிறந்த நாள்..
நீ பிறந்த அந்நாளில் நான் இந்த புவியில் இல்லை..
உன் பிறந்த நாளை நான்
கொண்டாடும் இந்நாளில் நீ இந்த புவியில் இல்லை..
இன்று நீ இங்கு இல்லாதிருக்கலாம்..
எனினும் நீ எழுதிச்சென்ற கவிதைகள்
என் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை நீ அறிவாயோ
மந்திர வாதி யென்பார்-சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார் யந்திர சூனியங்கள் -இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம் அந்த அரசியலை -இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்(நெஞ்சு) சிப்பாயைக் கண்டு அ ஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் துப்பாக்கி கொண்டு ஒ ருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பால் எவனோ செல்வான்-அவன் ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிற்பார் எப்போதும் கைகட்டுவார்-இவர் யாறிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் (நெஞ்சு) நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு கோடிஎன் றால் அது பெரிதாமோ? ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால், நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)
சாத்திரங்கள் ஒன்றும் காணார் -பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன் றா யிருந்தாலும் -ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார் தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் ஆத்திரங் கொண்டே இவன் சைவன் -இவன் அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்குதில்லையே -இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே -இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)
எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார் நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே -இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்(நெஞ்சு)
தமிழ் இனி மெல்ல சாகும் என்று மகாகவி பாடியதாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது . உண்மையில் "தமிழ் இனி மெல்ல சாகும் என்று ஒன்றும் தெரியாத பேதை ஒருவன் கூறுகின்றான். இந்த மாதிரி வார்த்தைகளை நான் கேட்க விரும்பவில்லை. எனவே தமிழை காப்போமாக" என்றே அவர் கூறுகிறார்.
ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட
போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.